ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்யத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலைக் குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலைக் குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 4மணிக்கு கூடியது. ஏறக்குறைய 2 மணிநேரம் வரை இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை காலதாமதம் இன்றி உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.