இந்தியா ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தின் நைன்வா என்ற ஊரில் 40 வயது ஆணின் உடல் பாழடைந்த கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் காதலரைப் பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராம்பாரோஸ் என்பவரின் உடலை காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். இவரைக் காணவில்லை என்று முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பாக ராம்பாரோஸின் மனைவி பியுலெந்தா பாய் (32), இவருடன் முறைதவறிய உறவில் இருந்த சந்திரா பிரகாஷ் சவுத்ரி (35) ஆகியோரைக் கைது செய்தனர்.
பியுலெந்தா பாயும் சந்திர பிரகாஷ் சவுத்ரியும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தனர். இருவருக்கும் ஓராண்டு காலமாக முறைதவறிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது இந்த உறவு தெரியவர கணவர் கண்டித்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
இதனையடுத்து ராம்பாரோஸை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளனர். கணவனின் உணவில் மனைவி விசம் கலந்தாள். சாப்பிட்டவுடன் கணவர் மயங்கிச் சரிந்துள்ளார். இதன் பிறகு சந்திரபிரகாஷ் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
கொலை செய்து விட்டு ராம்பாரோஸின் வீட்டிலேயே இருவரும் பிணத்தை மறைத்து வைத்துள்ளனர். பிறகு இரவு நேரத்தில் அவரது உடலை சாக்குப்பையில் அடைத்து ராம்பாரோஸின் மோட்டார் சைக்கிளிலேயே அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். கடைசியாக பாழடைந்த கிணற்றில் சாக்குப்பையில் உடலுடன் வீசி எறிந்து விட்டு வந்துள்ளனர். உடலைக் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளைபொலிஸார் கைப்பற்றினர்.
விசாரணையில் மனைவி கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 4 நாள்கள் சாக்கில் அடைபட்டு கிடந்த ராம்பாரோஸின் உடல் தற்போது சடலப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராம்பாரோஸின் குடும்பத்தினர் இந்தக் கொலையை அடுத்து ஆத்திரம் அடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர், இந்தக் கொலைக்குக் காரணமான அனைவரையும் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.